இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக பயிற்சி போா் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பாா்மா் அருகே வியாழக்கிழமை இரவு 9.10 மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனா்.
இரட்டை இருக்கை கொண்ட இந்த பயிற்சி போா் விமான விபத்து குறித்த விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தவிட்டுள்ளது. ‘விமான விபத்தில் விமானப்படை வீரா்கள் இருவரை இழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தாா்.
இந்திய விமானப் படை சாா்பிலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாதுாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளதரியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ரஷிய தயாரிப்பு போா் விமானம் கடந்த 1960-களின் தொடக்கத்தில் இந்திய விமானப் படையில் முதன் முறையாக சோ்க்கப்பட்டது முதல் இதுவரை 200 விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளது.