அவிநாசி அருகே அனுமதியின்றி செயல்படும் ஜெபக்கூடத்திற்கு எதிராக, அப்பகுதி மக்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த செம்பியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் ஜெபக்கூடம் செயல்படுகிறது.
மதம் மாற்றும் முயற்சியும் இங்கு நடப்பதாக கூறி, அங்கு வசிக்கும் தியாகராஜன் என்பவர், செப்., 4ம் தேதி அவிநாசி போலீசில், புகார் அளித்தார்.அதன்படி, அவிநாசி தாசில்தார் ராஜேஷ், செப்., 7ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சு நடத்தினார்.அனுமதியின்றி கட்டடம் கட்டி அதில் உரிய அனுமதி பெறாமல் ஜெபக்கூடமாக பயன்படுத்தியது, ஆய்வில் தெரிந்தது.
பிரார்த்தனை நடத்த ஜெபக்கூடத்தை பயன்படுத்தக் கூடாது என தாசில்தார் தடை விதித்து உத்தரவிட்டார்.இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பை விட அதிக அளவில் ஆட்கள் வரவழைக்கப்பட்டு, ஜெபக்கூடத்தில் பிரார்த்தனை நடந்து வருகிறது.நேரு நகர் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வீடுகள் முன், நேற்று கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.