இமயமலையில் பனிச்சரிவு: மாயமான 27 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தீவிரம்

0
393

புதுடில்லி-உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. உத்தரகண்டிலிருக்கும் இமயமலையில், ‘திரவுபதி’ மலைச்சிகரம் உள்ளது. இங்குள்ள, நேரு மலையேற்ற பயிற்சி மையம், மலையேற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் திரவுபதி மலைச்சிகரத்தில் ஏறினர். இதில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் திரும்பி கொண்டிருக்கையில், திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர். இந்நிலையில், நேரு பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்த மலையேற்ற பயிற்சியில், ஏழு பயிற்சியாளர்கள் உட்பட 61 பேர் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட பனிச்சரிவில் 41 பேர் சிக்கினர்.இதில் ஐந்து பயிற்சியாளர்கள் உட்பட 10 பேர் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேர், ‘பேஸ் கேம்ப்’ பகுதியில் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 27 பேர், பனிப்பாறை பிளவுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விமானப்படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மையத்தின் பயிற்சியாளர்களான நவ்மி ராவத் மற்றும் சவிதா கன்ஸ்வால் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில், சவிதா கன்ஸ்வால் என்பவர், மிக திறமையான மலையேற்ற வீரராக இருந்தவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here