அக்டோபர் 06, 2022, கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற தசரா திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு மைசூரு தசரா திருவிழாவை கடந்த 25 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்.
பொதுமுடக்கம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், 10-வது நாள் திருவிழா நேற்று வண்ணமயமாக நடைபெற்றது மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள நந்தி கொடி மரத்துக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து பிற்பகலில் தசரா விழாவின் அங்கமான யானைகள் ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்தார்.. 750 கிலோ எடைகொண்ட தங்க பல்லக்கில் வைக்கப்பட்ட சாமூண்டீஸ்வரி அம்மனை அபிமன்யூ யானை கம்பீரத்துடன் சுமந்து வந்தது. அலங்கரிக்கப்பட்ட யானைகள் புடைசூழ வந்த ஊர்வலத்தை ஏராளமான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.
அரண்மனை முன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய அதிகாரிகள் பல்லக்கில் வந்த சாமூண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களை தூவி வணங்கினர்.மணிமண்டப மைதானத்தில் அணிவகுப்பு நிறைவடைந்த நிலையில், அங்கு நடைபெற்ற டார்ச் லைட் அணிவகுப்பு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. வாண வேடிக்கைகளையும் கண்களுக்கு விருந்து படைத்தன.