”நாட்டின் வரலாறு தெரிந்தால் தான் பெருமை தெரியும்”: கவர்னர் ரவி பேச்சு

0
122

கோவை: கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ”நாட்டின் வரலாறு தெரிந்தால் தான், பெருமை தெரியும்,” என, தமிழக கவர்னர் ரவி கூறினார்.

கோவை எட்டிமடை அமிர்தா பல்கலை., வளாகத்தில் 19 வது பட்டமளிப்பு விழா கல்லுாரி நடந்தது. . பெங்களூரு பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி தலைவர் தத்தாத்ரி சலகாமே, பல்கலை பதிவாளர் சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 20 பிஎச்.டி., பட்டம் உட்பட மொத்தம், 1808 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் எதிர்காலம், கட்டமைப்பு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது. இன்று புதிய இந்தியா உருவாகி வருகிறது. இதை மேலும் வளமுடையதாக மாற்றுவது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது.

சிறந்த தலைவரான நம் பிரதமர் மோடியால், உலகமே இன்று நம்மை திரும்பிப் பார்க்கிறது. தமிழகம் நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளது. உயர்கல்வி செல்வோர் விகிதம் தேசிய அளவில், 28 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் அது, 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் உயர்கல்வி விகிதம் 12 – 14 சதவீதம் மட்டுமே உள்ளது. இது தேசிய அளவை விட மிகக்குறைவு. மாணவர்கள் குறைந்த செலவில், செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகளை தயாரிக்கின்றனர். பல வெளிநாடுகள் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இது தான் நம் இளைஞர் சக்தி. நாட்டின் ஆண்களும், பெண்களும் நாட்டை வடிவமைப்பது தான் நம் திறன். கொரோனாவால், இந்தியாவில், எட்டு கோடி பேர் உயிரிழப்பர் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், நம் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர்.

பல நாடுகளில் தடுப்பூசி பொதுமக்களுக்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில், அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. அது தவிர, தடுப்பூசி, 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டது. இன்று, 120 க்கும் மேற்பட்ட நாடுகள் இயற்கையை பாதுகாக்க இந்தியாவுடன் கைகோர்த்துள்ளன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் இருநாடுகளும் நம் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுள்ளன.

அடுந்த, 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். வரும், 2047 ம் ஆண்டுக்குள் இது நடக்க வேண்டும் இதில் ஒவ்வொருவரின் பங்கும் உள்ளது. இளைஞர்கள் பண்பாடு, கலாச்சாரம், கொள்கைகளை கொண்டா நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

முதல் நுாற்றாண்டு முதல், 18 ம் நுாற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளதாக வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துங்கள். உங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் போது தான் உங்கள் பெருமை தெரியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here