காஞ்சிபுரம்: ”நதிநீர் இணைப்புக்கு, மாநிலங்கள் முன்வந்தால் சாத்தியம்,” என, மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், நேற்று மாலை, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜல் ஜீவன் திட்ட பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
பின், நிருபர்களிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியதாவது: ஜல் ஜீவன் திட்டம், 2019 முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழக அரசு குறிப்பிட தகுந்த அளவில் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மாநிலம் முழுதும், 40 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மிகச்சிறப்பாக திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மாநிலத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நதி நீர் இணைப்பு என்பது, பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.