மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மத்திய இணையமைச்சர் பிரகலாத்சிங் படேல் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள புதிய இணைப்புகள், நீர் மேலாண்மை திட்டங்கள், தேனி மாவட்டம் கோட்டூரில் அமைய உள்ள உணவுப் பூங்கா ஆகியவை குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினரால் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட்களின் கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நடப்பாண்டில் ரூ. 60 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தியில் பாரதம் அடுத்த ஆண்டிற்குள் தன்னிறைவு பெறும். பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு பாரதம் வேளாண்மையில் முன்னேற்றம் அடையும்” என்று கூறினார்.