ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது ‘விஸ்வ ஸ்வரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சிவன் சிலை நேற்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. 369 அடி உயரமுள்ள இச்சிலை, உலகிலேயே உயரமான சிவன் சிலையாக கருதப்படுகிறது. ‘தத்பதம் சன்ஸ்தான்’ என்ற அமைப்பு இந்த சிலையை நிறுவியுள்ளது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை சுமார் 20 கி.மீ தொலைவில் இருந்தும் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகச சுற்றுலா வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று பார்க்கலாம். இங்கு ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் டன் இரும்பு, கான்கிரீட் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளாக இந்த சிவன் சிலை கட்டப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.