மனதின் குரல் 94வது பகுதி

0
122

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான ‘சாத்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. சாத் அன்னை அனைவருக்கும் வளம், நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. சூரிய உபாசனை எனும் பாரம்பரியம், நமது கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவை, இயற்கையோடு எத்தனை ஆழமான தொடர்பு கொண்டுள்ளன என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. சாத் திருநாளானது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கும் ஒரு உதாரணம்.

சரி, சூரிய வழிபாட்டோடு கூடவே, அந்தச் சூரியன் அளிக்கும் நல்வரங்கள் பற்றியும் பேசலாமே! சூரியதேவன் வழிபடு தெய்வம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையின் மையமாகவும் இருந்து வந்திருக்கிறார். பாரதம் இன்று தனது பாரம்பரியமான அனுபவங்களை நவீன விஞ்ஞானத்தோடு இணைத்து வருகின்ற வேளையில், இன்று நாம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறோம். சூரிய சக்தியால் நமது தேசத்தின் ஏழைகள் மற்றும் மத்தியத்தட்டின் வாழ்க்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பதும் ஆய்வுக்குரிய விஷயம்.

தமிழகத்தின், காஞ்சிபுரத்தில் இருக்கும் விவசாயி கே. எழிலன், ‘பிரதம மந்திரி குசும்’ திட்டத்தினால் ஆதாயம் அடைந்தார், தனது வயலில் பத்து குதிரை சக்தியுடைய சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டைப் பொருத்தினார். இப்போது இவர் தனது வயலுக்காக மின்சாரத்துக்காக செலவு செய்ய வேண்டியதில்லை. வயலில் நீர்ப்பாசனத்திற்காக இப்போது இவர் அரசின் மின்சாரத்தையும் சார்ந்திருக்கவில்லை. இதே போல ராஜஸ்தானின் பரத்பூரிலும் பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் பயனடைந்த மேலும் ஒரு பயனர் விவசாயி கமல்ஜி மீணா அவர்கள். கமல்ஜி தனது வயலுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பினைப் பொருத்தினார். இது அவரது செலவினைக் குறைத்தது. வருமானம் அதிகரித்தது. சூரிய சக்தியால் மேலும் பல சிறு தொழில்களையும் செய்கிறார் கமல்ஜி. இவருடைய இடத்தில், மரவேலை, பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் தொழில்களுக்கு சூரியசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவர் 12 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார்.

மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரிய சக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மோடேரா சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, உபரி மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது. இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள். பாரதத்திலே சூரியசக்தி கிராமங்களின் நிறுவல் என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. இது தான் சூரியதேவனின், சூரியசக்தியின் வரப்பிரசாதமாகும். நீங்களும் இதிலே இணைந்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள் என்பதே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.

நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித் துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றன. பாரதம் ஒரே நேரத்தில் 36 செயற்கைக் கோள்களை, சில நாட்கள் முன்பாக விண்ணில் ஏவியது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகக் கிடைத்த இந்த வெற்றி, நமது இளைஞர்கள் தேசத்திற்கு அளித்த சிறப்பு தீபாவளிப் பரிசு. இந்த ஏவுதல் காரணமாக ஒட்டுமொத்த தேசத்திலும் டிஜிட்டல் இணைப்புத் திசையில் பலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் தொலைவான பகுதிகளையும் தேசத்தின் பிற பாகங்களோடு எளிதாக இணைக்கலாம். மிகப் பழைய விஷயம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அப்போது, பாரதத்திற்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட காலம். ஆனால் பாரதத்தின் விஞ்ஞானிகள், உள்ளூர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று இதன் உதவியால் ஒரே நேரத்தில் பல டஜன் செயற்கைக்கோள்களை அனுப்பவும் முடிந்திருக்கிறது. இந்த ஏவுதலால் பாரதம் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் ஒரு பலமான சக்தியாகி உள்ளது. இது விண்வெளித் துறையில் பாரதத்திற்குப் புதிய கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

பாரதத்தின் தனியார் துறைக்கு இதைத் திறந்து விட்ட பிறகு இதிலே புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பாரதநாட்டுத் தொழில்துறையும், ஸ்டார்ட் அப்புகளும் இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்களையும், தொழில்நுட்பங்களையும் புகுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன.

மாணவர் சக்தி என்பதன் வீச்சு மிகப்பெரியது, மிகவும் பரந்துவிரிந்தது. அது பாரதத்தை சக்தி படைத்ததாக ஆக்கும் ஆதாரம். இன்றைய இளைஞர்கள் தாம், பாரதத்தை 2047ம் ஆண்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள். சுதந்திர பாரதம் தனது நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இளைஞர்களின் இந்தச் சக்தி, அவர்களின் உழைப்பு பாரதத்தை எந்த உயரத்திற்குக் கொண்டு சேர்க்குமோ, அந்த உறுதிப்பாட்டைத் தான் தேசம் இன்று எடுத்துக் கொண்டு வருகிறது. நமது இன்றைய இளைஞர்களின் முயற்சிகளை காணும் போது மனதில் மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது.

நான் செங்கோட்டையிலிருந்து ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சிகள் என்ற அறைகூவலை விடுத்திருந்தேன் என்பது நினைவிருக்கலாம். இதற்கான பொறுப்பை நமது தொழில்நுட்பக் கழகங்கள், ஐ.ஐ.டிக்களின் மாணவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் அனைத்து 23 ஐ.ஐ.டி’களும் தங்களுடைய கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஆய்வுச் செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்த, முதன்முறையாக ஒரே மேடையில் குழுமினார்கள். இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒன்றை விட மற்றது சிறப்பானவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி புவனேஸ்வரின் ஒரு குழு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வெண்டிலேட்டரை பிறந்த சிசுவிற்காக மேம்படுத்தியிருக்கிறார்கள். இது பேட்டரியில் இயங்குகிறது, தொலைவான இடங்களில் கூட இதனைப் பயன்படுத்த இயலும். பல ஐ.ஐ.டி’கள் இணைந்து ஒரு பன்மொழி செயல்திட்டத்தின் மீது பணியாற்றி வருகின்றார்கள், இது மாநில மொழிகளைக் கற்கும் வழிமுறையை எளிமைப்படுத்துகிறது. இந்தச் செயல்திட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கை, அதன் இலக்குகளை எட்டவும் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஐ.ஐ.டி மெட்ராசும், ஐ.ஐ.டி கான்பூரும் இணைந்து பாரதத்தின் சுதேசி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை சோதனைக் களத்தைத் தயார் செய்திருப்பதில் முதன்மை பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். இது ஒரு பிரமாதமான தொடக்கம்.

கர்நாடகத்தின் பெங்களூரூவில் வசிக்கும் சுரேஷ் குமாரிடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக மிகப்பெரும் வேகம் இருக்கிறது. சூழலியல், கலாச்சாரம் என்ற இரண்டும் ஒன்றாக வளர வேண்டும், மலர வேண்டும். இதுவே அவர் எண்ணம். தமிழகத்திலும் இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான முயல்வு உள்ளது. கோயம்புத்தூரின் ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் ஒரு குழு, ஏற்றுமதி செய்யத்தக்க, சூழலுக்கு இணக்கமான மண்ணால் ஆன பத்தாயிரம் தேநீர் கோப்பைகளை இந்தப் பெண்கள் உருவாக்கினார்கள். களிமண் கலவை தொடங்கி, இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் இவர்களே செய்தார்கள். இந்த அற்புதமான முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

திரிபுராவின் சில கிராமங்கள், ‘பயோ கிராமம் 2’ என்ற படிநிலையை எட்டி இருக்கின்றன. பயோ கிராமம் 2ல், இயற்கைப் பேரிடர் காலங்களில் உண்டாகும் இழப்புக்களை எப்படிக் குறைக்கலாம் என்ற கோணத்திலும் சிந்தனை செலுத்தப்பட்டுள்ளது. நீர் காற்று மாற்றத்திற்கு எதிரான இயக்கத்திற்கு, பயோ கிராமம் 2, வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. பாரதத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அர்ப்பணிக்கப்பட்ட ‘மிஷன் லைப்’ தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் கோட்பாட்டு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத வாழ்க்கைமுறைக்கு ஊக்கமளித்தல். நீங்களும் இதனை தெரிந்து கொள்ளுங்கள், பின்பற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

நாளை, அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு தினம். சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த நாள். இந்த நாளன்று தேசத்தின் பல்வேறு இடங்களிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டம், தேசத்தில் ஒற்றுமை இழையைப் பலப்படுத்துகிறது, நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இதே போன்ற உணர்வு, நமது தேசிய விளையாட்டுக்களில் காணக் கிடைத்தது. இதுவரையிலான மிகப்பெரிய ஏற்பாடாக இருந்த இதில், 36 விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன, இவற்றிலே, 7 புதிய மற்றும் 2 சுதேசிப் போட்டிகளான யோகாசனம் மற்றும் மல்லகம்பமும் இடம் பிடித்தன. இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில், கலையும் விளையாட்டுக்களும் உடைய கலாச்சாரத்தின் சங்கமம் நடந்தது. விளையாட்டு வீரர்களும் பகல் பொழுதில் விளையாட்டுக்களில் பங்கெடுத்தார்கள், இரவிலே கர்பாவும், டாண்டியாவும் அளித்த வண்ணங்களில் மூழ்கித் திளைத்தார்கள். குஜராத்தி உணவு மற்றும் நவராத்திரியி கொண்டாட்டங்களில் பங்கெடுத்தார்கள். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினுக்கும் அதே அளவு பலம் சேர்க்கிறது.

நவம்பர் மாதம் 15ம் தேதியன்று தேசத்தின் பழங்குடியின மக்களின் பெருமை நாள் கொண்டாடப்படும். கடந்த ஆண்டு, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளன்று, பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கௌரவத்தைக் கொண்டாடும் வகையில், தேசம் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது. பிர்சா முண்டா தனது வாழ்க்கையிலே, ஆங்கிலேயர்களின் யதேச்சாதிகாரத்திற்கு எதிராக, லட்சக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்தார். பாரதத்தின் சுதந்திரம் மற்றும் பழங்குடிகளின் கலாச்சாரப் பாதுகாப்பிற்காக, தனது வாழ்க்கையையே பலிதானமாகக் கொடுத்தார். நமது பழங்குடியினக் கலாச்சாரத்தை நாம் மறந்து விடக்கூடாது, புறந்தள்ளக்கூடாது என்ற விஷயத்தில் அவர் எப்போதுமே அழுத்தமளித்து வந்தார். இன்றும் கூட, தேசத்தின் பழங்குடியினச் சமூகங்களிடமிருந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பல படிப்பினைகளை நாம் கற்க வேண்டியிருக்கிறது.

இன்று நான் அனைத்துப் பழங்குடியின தியாகிகள், கோவிந்த குருஜி ஆகியோருடைய மகத்தான சாகஸம் மற்றும் துணிவுக்குத் தலை வணங்குகிறேன். இந்த அமுத காலத்திலே பகவான் பிர்ஸா முண்டா, கோவிந்த குரு அவர்கள், பிற சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஆதர்சங்களை எத்தனை கருத்தொருமையோடு பின்பற்றுகிறோமோ, நமது தேசம் அந்த அளவுக்குச் சிகரங்களைத் தொடும்.

நவம்பர் மாதம் 8ஆம் தேதி குருபுரப் ஆகும். குரு நானக்கின் பிறந்த நன்னாள் எந்த அளவுக்கு நமது நம்பிக்கைகளுக்கு மகத்துவமானதோ, அதே அளவுக்கு அதிலிருந்து நமக்குக் கற்றல்களும் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தேசம் குருமார்களின் ஒளியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பல முயற்சிகளைப் புரிந்திருக்கிறது. இதே நாளன்று தான் கார்த்திகை பௌர்ணமியும் வருகிறது. இந்த நாளன்று நமது தீர்த்தங்களில், நதிகளில் நாம் புனித நீராடுவது வழக்கம். சேவை, தானம் ஆகியவற்றில் ஈடுபடுவோம். இந்த அனைத்துத் திருநாட்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நமது அனைத்து மாநிலங்களிலும், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்பது, உதவி செய்வது, இணைந்து பணியாற்றும் உணர்வு ஆகியவை எந்த அளவுக்கு பலமடையுமோ, அந்த அளவுக்கு தேசம் முன்னேறும். இந்த உணர்வோடு நாம் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நீங்கள் எல்லோரும் உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here