பெங்களூரு: இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க 2020 ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் பதிக்கத் தொடங்கின.
இந்நிலையில் தற்போது இந்திய விண்வெளித் துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தொழில்நுட்ப மாநாடு நேற்று பெங்களூரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இஸ்ரோவின் தலைவர் சோமநாத், இந்திய விண்வெளித் துறையில் களமிறங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்துப் பேசினார். “இதுவரையில் இஸ்ரோவில் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
அந்நிறுவனங்களின் விண்வெளி தொழில்நுட்ப உருவாக்கத்தில் இஸ்ரோ உறுதுணையாக உள்ளது. பல நிறுவனங்கள் இத்துறையில் மிகப் பெரும் நிறுவனங்களாக வளரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. தற்போது பதிவு செய்துள்ள 100 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தயாரிப்பில் கவனம் செலுத்திவருகின்றன” என்று குறிப்பிட்டார்.