தியாகங்களை மறக்க கூடாது

0
192

சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணி துறை சார்பில், 9.5 அடி உயரம், 850 கிலோ எடையில் ரூ.15 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் இரண்டாவது பிரதமருமான லால்பகதூர் சாஸ்திரியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அவர், “லால்பகதூர் சாஸ்திரியின் எளிமை, தேச வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற அவரது முழக்கம் மிகவும் பிரபலமானது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பாதுகாப்புத்துறையின் தேவை கருத்தில் கொள்ளப்படாததால், ஜம்மு காஷ்மீரின் பெரும் பகுதியையும் சியாச்சின் உட்பட ஒவ்வொரு பிரதேசங்களாக எதிரிகளிடம் நாம் இழந்தோம். அதனால், 1962ல் நாடு மிகப்பெரும் அவமானத்தை சந்தித்தது. நமது அணிசேரா கொள்கை, அமைதிக் கொள்கை ஆகியவற்றால் ஆக்கிரமிப்புகளும் ஊடுருவல்களும் அதிகரித்தன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து நிலவியது. மேலும், கடும் வறட்சி ஏற்பட்டு, உணவு பஞ்சத்தால் தேசம் இன்னலை சந்தித்தது. மக்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு, ‘நாடும், நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். பாதுகாப்பு படைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தார். 1965ல் நடந்த போர் வெற்றிக்கு பிறகு, நமது நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்தனர். தற்போது, நாட்டில் மக்கள்தொகை உயர்ந்தபோதிலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். உலகுக்கே உணவு வழங்கி வருகிறோம். லால்பகதூர் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த பசுமை இயக்கமே இதற்கு காரணம். தேசத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் தமிழக ஆளுநராக பதவியேற்றபோது, தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் 40 பேரின் விவரங்கள் மட்டுமே எனக்கு தெரிந்திருந்து. ஆனால், தற்போது 1,500க்கும் மேற்பட்டவர்களின் விவரங்களை அறிந்து கொண்டுள்ளேன். தேசத்துகாக இன்னுயிர் ஈந்த வீரர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. பாரதத்தின் 100வது சுதந்திர தினத்தில் அதனை உலகின் வழிகாட்டியாக மாற்ற வேண்டும்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here