மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து தாக்க்கல் செய்த மனுவில், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று கூறுகிறது. அரசியல் சாசனத்தின் 30வது பிரிவில் மாநில அளவிலேயே மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினரை அடையாளம் காணலாம் என்று டி.எம்.ஏ பாய் வழக்கில், உச்ச நீதிமன்றம் 2002ம் ஆண்டில் பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர், லடாக், லட்சத் தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், மற்ற மதத்தினரைவிட ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, அந்த மாநிலங்களில் ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மாநில அரசுகளே சிறுபான்மை அந்தஸ்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியால், மத்திய அரசுக்கே இந்த விவகாரத்தில் அதிகாரம் இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு கோரியது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இதுவரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிட மிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களும் விரைவாக கருத்துகளை அனுப்பி வைக்குமாறு நினைவூட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் 4 வாரங்களில் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு, இதுவரை பதில் அளிக்காத மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.