எம் எம் தண்டபாணிதேசிகர் 

0
331

1. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் ஆகஸ்ட் 27, 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். சிவத்தொண்டு புரிந்து வரும் ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயில்களில் தந்தை பாடும்போது உடன் இருந்த இவருக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. சடையப்ப பிள்ளை என்ற சங்கீத வித்வானிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார்.

2. முதன்முதலாக இவரது சங்கீத அரங்கேற்றம் திருமருகல் ராமர் கோயிலில் நடைபெற்றது. கணீரென்ற சிறுவனது குரல் அனைவரையும் கவர்ந்தது.

3. இசை என்பது ஒரு சிலர் பாடி, கேட்டு ரசிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது, சாதாரண மக்களும் இசையைக் கேட்டு ரசிக்க வேண்டும் என்று கருதியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது ‘தமிழ்ப் பாமாலை’ என்ற நூலை வெளியிட்டார். திருக்குறளுக்கு முதன்முதலாக இசை அமைத்து, அதை இறைவணக்கமாகப் மேடையில் பாடியவர் என்ற பெருமை பெற்றார்.

4. கர்நாடக இசையில் அமைந்த பல கீர்த்தனைகளையும் இவர் புனைந்துள்ளார். 1935-ல் இவரது பாடும் திறனால் கவரப்பட்ட வேல் பிக்சர்ஸ் அதிபர்கள் இவரைப் ‘பட்டினத்தார்’ படத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இதில் பெரும்பாலான பாடல்களை இவரே பாடினார். இப்படம் 25 வாரங்கள் ஓடியது.

5. தனது வெண்கலக் குரலில் திரைப்படங்களில் இவர் பாடிய ‘ஜகஜனனீ’, ‘என் அப்பன் அல்லவா’, ‘வழிமறித்து நிற்குதே’, ‘காண வேண்டாமா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

6. திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முழு நேர இசைக் கலைஞராகவே வாழ்ந்து வந்தார். தமிழகம் முழுவதும் கச்சேரிகள் நடத்தி வந்தார். ‘சங்கீத சாகித்திய சிரோமணி’, ‘சங்கீத கலாசிகாமணி’, ‘இசைப்பேரறிஞர்’, ‘சங்கீத நாடக அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

7. தமிழ்ப்பாடல்களை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர். தேவாரப் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார்.

8. சுருதி சுத்தமான சாரீரம், அபாரமான உச்சரிப்புத் திறன், பாடல்களின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை ஆகியவை இவரது தனித்தன்மையாக விளங்கின.

9. ‘நடமாடும் தமிழிசை’, ‘ஐந்தாம் தமிழ்ச் சங்கம்’ என்றெல்லாம் புகழப்பட்டவரும் தமிழகத்தின் தலைசிறந்த சங்கீத வித்வான்களில் ஒருவருமான எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம், 64-வது வயதில் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here