விமானப்படையில் உள்ள ஆன்டனோவ் ரக ஏ என் 32 ரக போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக, நவீன சி 295 விமானங்களை கொள்முதல் செய்வது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது. இந்திய விமானப்படையில் தற்போது 90 எண்ணிக்கையிலான ஏ என் 32 ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள், பாதுகாப்பு படையினரையும் ராணுவத் தள்வாடங்களையும் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் 2030க்குள் விமானப்படை பணியிலிருந்து விடுவிக்கப்படும். இந்த விமானங்களுக்கு சரியான மாற்றாக சி 295 விமானங்கள் இருக்கும் என ராணுவம் கருதுகிறது. இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், உள்நாட்டிலேயே சி 295 ரக விமானங்களின் தயாரிப்பு தொடர்வதை உறுதி செய்ய முடியும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் கருதுகின்றனர். 56 எண்ணிக்கையிலான சி 295 ரக விமானங்களை ஏர்பஸ் நிறுவனம், டாடா நிறுவனத்துடன் இணைந்து பாரதத்தில் தயாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நினைவு கூரத்தக்கது.