திருக்குறள் பல்வேறு மொழிகளில் மத்திய அரசால் மொழி பெயர்க்கப்பட்டுகி வருகிறது. பிரதமர் மோடியின் விருப்பப்படி, இதை பாரதம் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் சுமார் 100 மொழிகளில் வெளியிட மத்திய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிறுவனம் மொழிபெயர்த்த 13 மொழிகளிலான திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை நவம்பர் 19 அன்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டார். இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஹிந்தி மொழியில் வெளியான திருக்குறள் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இவ்விழாவில் சுமார் 70 அரங்குகள் கொண்ட பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அரங்கில் வைக்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் அதிகமாக விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் வெறும் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூலாக மட்டுமின்றி தமிழ் மொழி, அதன் சிறப்பு, தமிழர்கள் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவம், தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியத்தில் திருக்குறளின் முக்கியத்துவம், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்கள் போன்ற பல்வேறு குறிப்புகளும் ஹிந்தியில் தரப்பட்டுள்ளது.