ககன்யான் திட்டம் வெற்றிபெறும்

0
122

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2007ல் துவங்கப்பட்டாலும் 2014ம் ஆண்டில் தான் இதற்கான ஆராய்ச்சிகள் வேகமெடுத்தன. இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது. விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களும் ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது அவர்களுக்காக பெங்களூருவில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு தொடர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்.வி.எம்3 ராக்கெட் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடைகள், பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவையும் தயாரிக்கப்பட்டுள்ளன.வரும் 2024ம் ஆண்டின் இடையே, ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. ஆளில்லா விண்கலத்தில் அனுப்புவதற்காக ‘வியோமா மித்ரா’ என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயாரித்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும்.அதன்பின் 2024ம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. மும்பையில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய இஸ்ரோவின் திரவ எரிபொருள் திட்ட இயக்குநர் வி.நாராயணன்,”ககன்யான் திட்டத்துக்காக இதுவரை 195 வகையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 164 சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது. கரோனா பெருந்தொற்றால் இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள், 2 வாரங்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபடுவார்ககள். பின்னர் பூமிக்கு பத்திரமாக திரும்புவார்கள். ககன்யான் நமது நாட்டின் கனவு திட்டம். இந்த திட்டத்தின் வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் ஆவலோடு காத்திருக்கிறது. முதல் முயற்சிலேயே இதனை வெற்றிகரமாக செயல்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here