கர்நாடக மாநிலம் பெலகாவியில் அமைந்துள்ள அம்மாநில அரசின் இரண்டாம் சட்டப்பேரவை கட்டடத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது பெலகவி சட்டப்பேரவை வளாகத்தில் விடுதலைப் போராட்டவீரர் வீர சாவர்க்கரின் படம் திறந்துவைக்கப்பட்டது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய சித்தராமைய்யா, “வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அரசு இதை செய்திருக்கிறது. இதை அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் என நான் சொல்ல மாட்டேன். வீர சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, அனைத்து தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார். இதற்கு பதில் அளிகும் விதமாக பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ் என அக்கட்சி உரிமை கோருகிறது. ஆனால், அந்த காங்கிரஸ் வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் முற்றிலும் வேறு. இரண்டும் ஒன்றல்ல. தற்போது இருப்பது போலியான காங்கிரஸ். சட்டப்பேரவை வளாகத்தில் வீர சாவர்க்கரின் படத்தை திறக்காமல் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் படத்தையா திறக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். இதனிடையே, சட்டப்பேரவையில் வால்மீகி, பசவன்னா, கணகதாசா, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோரின் படங்களையும் திறக்க வேண்டும் என சித்தராமைய்யா, சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.