கடந்த 2005ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த கடந்த 2007ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில்
நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது. ஆனால், இந்த பணியில் தேவையற்ற தொய்வு ஏற்பட்டது. மத்தியில் பா.ஜ.க அரசு 2014ல் பதவியேற்றதும் இப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, முதல் நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரி (எஸ் 21) 2017ல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019ல் ஐ.என்.எஸ் காந்தேரியும் 2021ல் ஐ.என்.எஸ் கரஞ் நீர்மூழ்கியும், ஐ.என்.எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலும் அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5வது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வகிர் நாளை கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இதற்காக, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கடற்படை தளபதி ஹரிகுமார் கலந்துகொண்டு ஐ.என்.எஸ் வகிர் நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். 350 மீட்டர் ஆழம் மூழ்கும்: இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். இரண்டு வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்கும். அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. தற்போது தயாரிக்கப்பட்டு வரும் கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6வது நீர்மூழ்கியான ஐ.என்எ.ஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கடற்படையில் இணைக்கப்படும்.