பாகிஸ்தான் ஆதரவு நாடகத்திற்கு முதல் பரிசு

0
188

கேரள மாநிலம் கோழிக்கோடு மேமுண்டா மேல்நிலைப் பள்ளியின் குழந்தைகள் நடத்திய “எல்லை” என்ற நாடகத்தின் ஒரு காட்சியில், ஒரு சிறுமி தன் தாய்க்கு முன்பாக உணர்ச்சிவசப்பட்ட புலம்புகையில், “அம்மா, நாம், கால்பந்தாட்டத்தில் பிரேசில், அர்ஜென்டினா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் வெற்றி பெறும்போது ஆரவாரம் செய்கிறோம். அப்படியெனில், நாம் பாகிஸ்தானுக்கு உற்சாகம் அளிக்கும்போது மட்டும் என்ன பிரச்சனை?” என கேள்வி எழுப்புகிறாள். இந்த வில்லங்கமான கேள்விக்கு அம்மாவின் பதில் மிகவும் முக்கியமானது. தாய் தனதுமகளை சமாதானப்படுத்த பேசுகையில், “என் அன்பு மகளே, நாம் என்ன செய்ய முடியும்! நமது நாட்டு மக்கள் உன் அளவுக்கு வரவில்லை” என கூறுகிறார். இதில் மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் மற்றொரு சம்பவமாக, மாவட்ட பள்ளி இளைஞர் விழாவையொட்டி நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் முதலாம் பரிசை இந்த நாடகம் பெற்றுள்ளது. ஏன் இப்படியொரு நாடகத்தை இளைஞர் திருவிழாவிற்குள் நுழைய பள்ளி நிர்வாகம் அனுமதித்தது, கிரீன் சிக்னல் கொடுத்தது, இந்த நாடகத்திற்கு நடுவர்கள் எப்படி முதல் பரிசை வழங்கினார்கள் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளி மாணவர்கள் “கிதாப்” என்ற நாடகத்தை அரங்கேற்றியபோது அதில், முக்கியமான உரையாடல்கள்களாக (1) மசூதிகளில் பெண்கள் ஏன் அசான் செய்ய அனுமதிக்கப்படவில்லை (2) சொர்க்கத்தில் ஏன் ஆண் ‘ஹவுரி’ இல்லை. (3) ஒரு ஆணின் ஞானத்தில் பாதியளவு பெண்களிடம் இருக்கிறது. எனவே, அவர்கள் அரை ஆடை அணிந்தால் பரவாயில்லையா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த நாடகத்தை மாநில இளைஞர் விழாவில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். சர்ச்சை தீவிரமடைந்தபோது, ஆர். உன்னி என்பவர் எழுதிய “வான்க்” (அசான்) கதையின் அடிப்படையில் நாடகம் எழுதப்பட்டது என்று பள்ளி அதிகாரிகள் தப்பினர். ஆனால், உன்னி தனது கதையில் அந்த வரிகளே இல்லை என்று கூறி தன்னை காப்பாற்றிக் கொண்டார். பின்னர் வேறு வழியின்றி, ஒரு பிரிவினரை புண்படுத்தும் வகையில் “கிதாப்” மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரியது.

அதே பள்ளி நிர்வாகம், தற்போது “எல்லை” நாடக விஷயத்தில் இப்படி மன்னிப்பு கேட்குமா? அதை செய்யாது என உறுதியாக நம்பலாம். ஏனெனில், வெளிப்படையாக, அவர்களிடமிருந்து யாரும் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. மேலும், இடதுசாரி, மதவாத சக்திகளும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளன.

மகளின் புலம்பல் மற்றும் தாயின் பதில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் நிகழ்ச்சி நிரலை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. பிரேசில், அர்ஜென்டினா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் பாகிஸ்தானை சமமாக காட்ட முயல்கிறது. ஆனால், இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், நியூசிலாந்து போன்ற நாடுகள் பாகிஸ்தானை போல லஷர் இ தொய்பா, உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதில்லை. பாரதத்தில் ரத்தக் குளியலை உருவாக்க முயலும் பாகிஸ்தான் போன்று இந்த நாடுகள், பாரதத்தில் வன்முறைகளை அரங்கேற்றுவதில்லை. நமது நாட்டில் பாகிஸ்தான் இன்றுவரை செய்து வரும் அட்டூழியங்கள், பயங்கரவாதங்கள், குண்டு வெடிப்புகள், போதைபொருள், கள்ள நோட்டுகள் கடத்தல்கள், ராணுவ வீரர்களை கொல்வது, மத அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட தேச விரோத சம்பவங்களை இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களோ, அதிகாரிகளோ, பெற்றோரோ எடுத்துச் சொல்வதும் இல்லை. இப்படிப்பட்ட பாகிஸ்தானுக்காக எந்த மக்கள் தான் கைதட்டுவார்கள்? என்று புரியவைப்பதும் இல்லை.

கண்டிப்பாக, இப்படிப்பட்ட தேச விரோத உணர்வுகளை பரப்பும் இதுபோன்ற நாடகத்தை அப்பாவி குழந்தைகள் அரங்கேற்றியிருக்க மாட்டார்கள். இது, கேரள இடதுசாரி மற்றும் மத அடிப்படைவாத சக்திகள் குழந்தைகளை தவறாக வழிநடத்துவதையே வெளிக்காட்டுகிறது.

மேலும், சுவாரசியமாக, மேற்குறிப்பிட்ட இரண்டு நாடகங்களும் ஒரே நாடக ஆசிரியரால் எழுதப்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது. அப்படியெனில், அந்த நாடக ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் இணைந்து சமூகத்தில் சர்ச்சைகளை உருவாக்கவும் உணர்வுப்பூர்வமான விஷயங்களைக் கொண்ட நாடகங்களை உருவாக்கி பதட்டத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற விழாக்கள், மன்றங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம் என கல்வியாளர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here