ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா

0
112

காவி தொப்பிகள், காவி கொடிகளுடன் ஜெய் ஸ்ரீராம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜெய், சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் கி ஜெய் என்ற முழக்கங்களுடன், ‘ஹிந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவை பங்கேற்றன. இதில் நான்கு வயது சிறுமி முதல் 87 வயது முதியவர் வரை பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தர்மவீரர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் தியாக தினத்தை தர்மவீரர் தினமாக அறிவிக்க வேண்டும், லவ் ஜிகாத், மதமாற்றம், பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ‘சாகல் ஹிந்து சமாஜம்’ என்ற அமைப்பு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊர்வலத்தில், சத்ரபதி சிவாஜி மற்றும் எம்.எல்.ஏ சிவேந்திரசிங் ராஜே போசலேவின் வழித்தோன்றல், சாந்த் துக்காராம் மகாராஜ் சிவாஜி மகராஜின் வழித்தோன்றல் மோரே, இந்துத்துவா தலைவர் தனஞ்சய் தேசாய் மற்றும் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் என்ற ராஜா பையா ஆகியோரும் பங்கேற்றனர்.

லால் மஹாலில் ராஜமாதா ஜிஜா பாய்க்கு மரியாதை செலுத்திய பின் இந்த அணிவகுப்பு தொடங்கியது. பின்னர் வழியில் உள்ள தக்துஷேத் ஹல்வாய் கணபதிக்கு ஆரத்தி பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு, டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் சிலையை ஊர்வலம் அடைந்தது. அங்கு பொதுக்கூட்டத்துடன் ஊர்வலம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் பேசிய சிவேந்திர சிங் ராஜே போஸ்லே, “இந்த அணிவகுப்பின் வடிவத்தில் இன்று நான் காவி புயலை பார்க்கிறேன். அனைத்து ஜாதி மற்றும் வகுப்புகளை சேர்ந்த ஹிந்துக்கள் இன்று ஒன்று கூடியுள்ளனர். ஹிந்துத்துவா பாதுகாக்கப்பட வேண்டும், கடவுள், நாடு, மதம் ஆகியவற்றின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அனைவரும் கருதுகிறோம். இப்போது நாங்கள் ஒன்று சேருவதைத் தவிர வேறு வழியில்லை, யாரையும் வெறுக்க நாங்கள் இங்கு ஒன்றாக வரவில்லை. அதனால் யாருக்கும் எதிராக நாங்கள் கோஷம் எழுப்பவில்லை. சிலர் தங்களது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ளவும், அரசியலில் ஈடுபடவும் சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகளை வெளியிடுகின்றனர். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் நினைவிடத்தை சுற்றுலா தலமாக மாற்றாமல் புனித யாத்திரை தலமாக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறகு பேசிய தனஞ்சய் தேசாய், “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தர்மம் இல்லாமல் சக்தி தீயதாகவும், சக்தி இல்லாமல் தர்மம் பலவீனமாகவும் மாறும். எனவே, நமது ஒற்றுமையே நமது பலம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜா சிங் தாக்கூர், “இது ஹிந்துக்களின் அலறல் அல்ல இது அவர்களின் கர்ஜனை. மகாராஷ்டிராவின் மாவ்லாக்களிடம் காணப்பட்ட அளவுக்கு வேறு எங்கும் ஹிந்துத்துவா காணப்படவில்லை. மதமாற்றத்தை எதிர்த்துப் போராடுவது நம் அனைவரின் தலையாய கடமை. இப்போது ஒவ்வொரு ஹிந்துவும் ஒரு சிப்பாயைப் போல தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். லவ் ஜிகாத் சதி தற்போது பாரதம் முழுவதும் பரவி வருகிறது. நாட்டில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். நாங்கள் யாருடனும் சண்டையிட விரும்பவில்லை, ஏனென்றால் பாரதத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாங்கள் விரும்புகிறோம். பசு எங்கள் தாய், பசு வதையை அனுமதிக்க மாட்டோம்” என உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்தி பார்வையாளர்களின் இதயங்களை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here