ஜம்மு காஷ்மீர் காவல்துறை கடந்த ஜனவரி 21ம் தேதி ஜம்முவில் நடந்த நர்வால் குண்டுவெடிப்பில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஆரிப் அகமது என்பவரை கைது செய்துள்ளது. ரியாசி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அரசுப்பள்ளி அசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ஆரிப்பின் தாய் மாமா கமருதின் பாகிஸ்தானில் இருக்கிறார். வாசனை திரவிய குப்பில் வைக்கப்பட்டிருந்த ஐ.இ.டியை (மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம்) ஆரிப் அகமது இரட்டைகுண்டுவெடிப்பில் ஈடுபட்டார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பசிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங், “நாங்கள் வாசனை திரவிய ஐ.இ.டியை மீட்டெடுப்பது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு நகரின் சாஸ்திரி நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பிலும் ஆரிப் சம்பந்தப்பட்டுள்ளார். பிடிபடாமல் இருப்பதற்காக, நர்வாலில் அவர் வெடிபொருட்களை வைத்துவிட்டு வந்த உடனேயே, தான் போட்டிருந்த ஆடைகள், காலணிகள் என அனைத்தையும் எரித்துவிட்டார். தான் எடுத்துச் சென்ற அலைபேசியையும் உடைத்துள்ளார். அவர் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி காசிம்மின் கீழ் வேலை செய்கிறார். சமீபத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் பலவற்றில் இவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜம்மு பகுதியில் பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களில் தனது பங்கு இருப்பதாக ஆரிப் ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை நாங்கள் பல வெடிக்கும் பொருட்கள், ஒட்டும் குண்டுகள், டைமர் பொருத்தப்பட்ட ஐ.இ.டிகளை பார்த்துள்ளோம். ஆனால் ஆரிப்பிடமிருந்து ஒரு புதிய வகை ஐ.இ.டி மீட்கப்பட்டுள்ளது. இந்த ஐ.இ.டி ஒரு பாட்டில் வடிவில் உள்ளது. பார்க்க வாசனை திரவிய பாட்டில் போலவே தெரிகிறது ஆனால் அது ஒரு வெடிகுண்டு. யாராவது இதை அழுத்தினால் அல்லது திறக்க முயன்றால் வெடிக்கும். இந்தவகை ஐ.இ.டி எங்களுக்கு புதியது என்பதால், அது எவ்வளவு தீங்கு விளைவிக்கும், அதன் சக்தி என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வார்கள்” என கூறினார்.