இளநிலை அதிகாரிகள், மற்ற தரவரிசைப் பணிகள், அக்னி வீரர்கள் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை குறித்த அறிவிக்கையை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஆள்தேர்வு நடைமுறையின்படி, ஆள்தேர்வு அணிவகுப்புக்கு முன்பாக கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
பதிவுக்கான அறிவிக்கைகள் www.joinindianarmy.nic.in. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலான பதிவுகளை பிப்ரவரி 16 முதல், மார்ச் 15, 2023 வரை மேற்கொள்ள முடியும்.
ஆள்தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்.
முதற்கட்டத்தில், அனைத்து விண்ணப்பதாரர்களும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில், தொடர்புடைய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதி தேர்வு மற்றும் உடல் அளவு தேர்வு ஆகியவற்றில் கலந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது கட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டும்.
கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை ஏப்ரல் 17 முதல், ஏப்ரல் 30, 2023 வரை நாடு முழுவதும் சுமார் 175 முதல் 180 தேர்வு மையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.