கல்வித் துறையில் உலகிற்கே இந்தியா வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தினார் என்று காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கி.ரா. அரங்கை திறந்து வைத்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரிலான இந்த அரங்கத்தைத் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். பாரதியார் கல்வியின் அருமையையும் அவசியத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 2014 இல் 7 ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை இப்போது 22 ஆக அதிகரித்துள்ளது எனவும், தற்போது நாட்டில் 596 மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த எட்டு ஆண்டுகளில் 66,000 மருத்துவப் படிப்பு இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமை வகிக்கிறது. இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே இப்போது உற்று கவனிக்கிறது. ஒரு இந்தியராக இது நமக்கு பெருமை, கெளரவம் ஆகும் என்றார். பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் இந்தியா தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2027இல் நாம் மூன்றாம் இடத்தை பிடிப்போம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எட்டு ஆண்டுகளில் 80,000 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்-ஐ பொறுத்தவரையில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று கூறிய அவர், உலகிற்கே வழிகாட்டியாகும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாம் அமிர்த காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அமிர்த கால பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஏ.வெங்கடேசன் எழுதிய “காரைக்கால்: எ டிவைன் சிட்டி” என்ற நூலையும் அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.