கோயில் பராம்பரியத்தில் தலையிடுவது தவறு

0
141

கோயில் பராம்பரியத்தில், வழிபாட்டில் நீதிமன்றம் தலையிடுவது வருத்தம் அளிக்கிறது என கூறி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யானைகளை வாங்கக்கூடாது என தமிழகத்தின் அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. கோயில்களில் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை (யானை, பசு, குதிரை ஆகியவற்றிற்கு செய்யப்படும் வழிபாடு) போன்றவை தொன்றுதொட்டு நிகழ்பவை. கோயில்களில் யானை இருக்க வேண்டும் என்பதாலேயே கோயில் நிர்மாணம் செய்த நம் முன்னோர்கள் கோவில் கட்டுமானத்தை பிரம்மாண்டமான முறையில் வலுவான வகையில் அமைத்தார்கள். பீட்டா போன்ற அமைப்புகள் உள்ள வெளிநாடுகளில் மனிதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதி மற்ற உயிரினங்களை பூமியில் வாழவிடாமல் ஒழித்தார்கள். இயற்கையோடு இணைந்த வாழ்வும், வழிபாடும் இந்த மண்ணின் பெருமை. யானையை விலங்காக பார்க்கும் மேலை நாட்டவர்களுக்கு அவற்றிடம் அன்பும் பாசமும் பக்தியும் செலுத்தும் தமிழனின் சரித்திரம் புரியாது. சமீபத்தில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இருந்த லட்சுமி என்ற யானை இறந்தபோது அதனை வளர்த்த பாகனும்.. யானையை வழிபட்ட பக்தர்கள் சிந்திய கண்ணீரும் அந்த பிரம்மாண்டமான உயிர்மீது வைத்த பாசத்தை வெளிப்படுத்தியது. எல்லா ஜீவராசிகளும் மனிதர்களுடன் ஒன்றி வாழ்வதில்லை. எவை எவை மனிதனுடன் வாழக்கூடியவை என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி வழிகாட்டி உள்ளார்கள். அவற்றையே இன்றுவரை பின்பற்றி வருகிறோம். பீட்டா போன்ற அன்னிய சக்திகள் நமது பாரம்பரியத்தை எதையாவது குற்றம் கூறி அழிக்கலாம் என முன்னெடுக்கிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை முடக்க இவர்கள் செய்த மாய்மாலங்கள் தான் எத்தனை எத்தனை? அதுபோல கேரளாவில் கோயில் வழிபாட்டில் பிரதானமான யானையை விலக்கவே துடிக்கிறது பீட்டா. யானை உருவ பொம்மையை கோயிலுக்கு பரிசளித்து இருப்பது இந்து வழிபாட்டை கேலிக்கூத்தாக்கும் நோக்கமே. கால் இல்லாதவர்களுக்கு செயற்கை உறுப்பு தந்து உதவலாம். ஆனால் ஆரோக்கியமான ஒருவரை ஊனமாக்கி உதவுவதாக நாடகம் நடத்துவது வஞ்சகம் என்பதை நீதிமன்றமும் கோயில் நிர்வாகமும் புரிந்துகொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோவிலுக்கும் தஞ்சையில் உள்ள மாரியம்மன் கோயிலிலுக்கும் யானைகள் வாங்கி தந்ததை பார்த்த காஞ்சி மகாபெரியவர் போன்ற மகான்கள், கோயிலுக்கு யானையை தானமாக தருவது எத்தகைய பெரும் புண்ணியம் என்பதை கூறியுள்ளதை நினைவுகூர்கிறோம். எனவே ஆலயங்களில் யானை பராமரிப்பது, கோசாலை இருப்பது பராம்பரிய சிறப்பு. இதில் நீதிமன்றம் தலையீடுவதை தவிர்க்க வேண்டும். பீட்டா போன்ற அன்னிய சக்திகள் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் தவறு செய்வதாக தெரிய வரலாம். தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர அதற்காக அந்த முறையையே ஒழிக்க வழிகூறுவது அறிவுடைய செயலாகாது. நமது பாரம்பரிய பெருமைகளை வழிபாட்டை காப்பது ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here