சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம் யுவ சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப மைய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களிடன் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “பாரதம் தனது சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடவுள்ள 2047ம் ஆண்டுக்குள், உலக நாடுகளில் பாரதம் உன்னத நிலையை எட்டவும், அதன் மீள் எழுச்சிக்காகவும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உறுதியான கோட்பாடு மிகவும் தேவையான ஒன்று. நமது பாரதத்தின் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், பாடல்கள், நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள், கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில்தான் உள்ளன. நமது மக்கள் பூமி தாய்க்கு மரியாதை தருபவர்கள். உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் மிகவும் முக்கியமானது. நம்மிடையே வேற்றுமைகள் பல இருந்தாலும் நாம் ஒற்றுமையாகவே இருக்கிறோம். அதனாலேயே நாம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம். ஒன்றுபட்டு கிடந்த நமது பண்டைய அரசுகள், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. கலாசார, நாகரிக துண்டிப்பும் இதற்கு சாத்தியக்கூறாக அமைந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு. துரதிர்ஷ்டவசமாக, அரசியல் வரையறைகள் மோசமாக பாதித்ததின் விளைவாக கலாசாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது மாநிலங்கள், நிர்வாக வசதி மற்றும் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டன. ஆனாலும் பாரதம் என்ற ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களையும், தாய் மண்ணையும் இரு கண்களாக பார்க்கிறார். நம் நாட்டை பற்றி உலக நாடுகளின் பார்வை தற்போது வெகுவாக மாறிவிட்டது. கல்வி, சுகாதார வசதி, உள்கட்டமைப்பு, குடிநீர், எரிவாயு சிலிண்டர், கழிப்பறை வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது. இது புரட்சிகரமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது தேசம் வளரும். இந்த தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது” என கூறினார்.