15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு

0
92

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. புதிதாக உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதியஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய, ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவு கணை முதல் முறையாக கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான் பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு முப்படையிலும் சேர்க்கப்பட்டன. இந்த ஏவுகணையின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை 450 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது. இந்த பின்னணியில் இந்திய கடற்படைக்காக ரூ.15,000 கோடி யில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை நடத்தி வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் கடற்படைக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் சவுதி உட்பட பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here