பண்டைய பாரத அறிவியல் ரீதியில் மதிப்பீடுகள்

0
221

பாரதக் கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, வேதங்கள் மற்றும் புராணங்கள் உட்பட பாரத அறிவு அமைப்பின் (Indian Knowledge System IKS) பல்வேறு அம்சங்களில் மாணவர்கள் தங்கள் நிபுணத்துவத்திற்கான மதிப்பீடுகளை இப்போது பெற முடியும். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NCrf) இதுகுறித்த இறுதி அறிக்கை கடந்த செவ்வாயன்று பல்கலைக் கழக மானியக் குழுவால் (UGC) வெளியிடப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி) 2020ன் படி தொடங்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, தொழிற்கல்வி மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையே கடினமான பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான இந்த அமைப்பின் ஆவணம் அக்டோபர் 2022ல் வெளியிடப்பட்டது, இறுதிக் கருத்துகளைப் பெற்ற பிறகு, உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையமான பல்கலைக் கழக மானியக் குழு இதனை அறிவித்தது.

பாரத அறிவு அமைப்பின் (IKS) பாரம்பரியம், 18 முக்கிய கல்விகள் (வித்யா) அல்லது தத்துவார்த்தத் துறைகள்; மற்றும் 64 கலைகள், பயன்பாட்டு அறிவியல் அல்லது தொழில்சார் துறைகள், கைவினைத்துறைகளைக் குறிப்பிடுகிறது. 18 வித்யாக்கள் என்பது, நான்கு வேதங்கள், நான்கு துணை வேதங்கள் (ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (ஆயுதப் பிரயோகம்), கந்தர்வ வேதம் (இசை), ஷில்பம் (கட்டடக்கலை), புராணம், நியாயம், மீமாம்சம், தர்ம சாஸ்திரம் மற்றும் வேதாங்கம், ஆறு துணை அறிவியல்கள், ஒலிப்பு, இலக்கணம், அளவை, வானியல், சடங்கு மற்றும் மொழியியல் ஆகும். இவை பண்டைய பாரதத்தின் 18 அறிவியல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.

பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி மற்றும் திறன் கல்வி மூலம் பெறப்பட்ட கல்வியை இந்த கட்டமைப்பானது ஒருங்கிணைக்கிறது. இது 5ம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி நிலை வரையிலான கற்றல் நேரங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தரவுகளை உள்ளடக்கும். கட்டமைப்பானது ஒவ்வொரு கற்றலுக்கும் அதன் மதிப்பீடு நடைமுறைகளுக்கு உட்பட்டு மதிப்பீடு செய்ய அனுமதிக்கிறது. வகுப்பறை கற்பித்தல், கற்றல், ஆய்வகப் பணிகள், புதுமை ஆய்வகங்கள், விளையாட்டு மற்றும் விளையாட்டுகள், யோகா, உடல் செயல்பாடுகள், கலைநிகழ்ச்சிகள், இசை, கைவினைப் பணி, சமூகப் பணி, என்.சி.சி போன்றவற்றின் மூலம் இதில் மதிப்பீடுகளை மாணவர்கள் பெறலாம்.

இறுதி அறிக்கை, அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு ஆவணத்தில் இல்லாவிட்டாலும், ‘சிறப்பு சாதனையாளர்கள்’ பிரிவின் கீழ் பட்டியலில் பாரத அறிவு அமைப்பை இணைக்கிறது. சிறப்பு சாதனைகளுக்கான அளவுகோல்களுடன் முன் வரையறுக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆவணம் வலியுறுத்தியது. “சிறப்பு சாதனை என்பது தேசிய அல்லது சர்வதேச நிகழ்வுகளில் பதக்கங்களை வெல்வது அல்லது பதவிகளை வகிப்பது, மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும் பத்ம அல்லது பிற விருதுகள் பெறுவது, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உயர் முன்னுரிமை சமூகப் பணி ஆகியவை சுயாதீன மதிப்பீட்டு முறைகள் மூலம் முறையாக மதிப்பிடப்படலாம்” என அது தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here