வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூடு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் சுடப்பட்டன. இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி இந்நிகழ்வில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது. மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வு.