பஞ்சாப்பின் அமிர்தசரசில் உலகப் புகழ் பெற்ற சீக்கிய கோவிலான பொற்கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலுக்கு ஆண் துணையுடன், பெண் ஒருவர் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமுக ஊடகங்களில் வைரலானது. வீடியோவில், அந்த பெண் பொற்கோவிலுக்குள் செல்ல ஏன் என்னை அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவரை அனுமதிக்க மறுத்த நபர், பெண்ணின் முகத்தில் மூவர்ணம் பூசிய தேசியக்கொடியின் உருவம் இருந்ததை சுட்டி காட்டியுள்ளார். மேலும், இது பஞ்சாப் என்றும் இந்தியா அல்ல என்றும் அந்த நபர் திமிராக கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பொது செயலாளர் குர்சரண் சிங் கிரெவால், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது சீக்கிய கோயில். ஒவ்வொரு மத தலத்திற்கும் என்று ஒழுங்கு இருக்கும். நாங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறோம். அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்றால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அந்த பெண்ணின் முகத்தில் இருந்த கொடி வர்ணம் நம்முடைய தேசியக்கொடி இல்லை. அதில் அசோக சக்கரம் இல்லை. அது ஓர் அரசியல் கொடியாக கூட இருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளார்.