சீர்காழி கோயிலில் கிடைத்த சுவாமி சிலைகள்

0
375

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், இதற்காக யாகசாலை அமைக்க மண் எடுக்கப்பட்டது. கோயில் உட்புறத்தில் மேற்கு கோபுர வாசல் அருகே பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 2 அடி ஆழத்தில் சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இடத்தில் தோண்டியபோது விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அய்யனார் உள்ளிட்ட சுவாமி சிலைகள், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட சமயக் குரவர்களின் சிலைகள் உட்பட 23 உலோகச் சிலைகள் கிடைத்தன. இவை அனைத்தும் சுமார் அரை அடி முதல் 2 அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. மேலும், 410 முழுமையான செப்பேடுகள், சேதமடைந்த 83 செப்பேடுகள் என மொத்தம் 493 செப்பேடுகள், 16 பூஜைப் பொருட்கள், 15 பீடங்கள், 50 கிலோ அளவிலான சேதமடைந்த உலோகப் பொருட்கள், கலசங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம், மேலும், செப்பேடுகளில், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு வந்து சிலைகள், செப்பேடுகள், பூஜை பொருட்களை பார்வையிட்டு, செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்தார். மேலும், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஹிந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் தொல்லியல் துறை ஆய்வாளர்களும் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here