ரூபாய் 4வது சர்வதேச நாணயமா?

0
181

சமீபத்தில், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கரன்சி எக்ஸ்சேஞ்ச் கவுண்டரில் டாலர், பவுண்ட், யூரோ ஆகியவற்றைத் தொடர்ந்து பாரதத்தின் ரூபாய் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து பாரதத்தின் ரூபாய் 4வது சர்வதேச நாணயமாக மாறியுள்ளதாக செய்தி பரவியது. அந்த காணொளியில், அந்நியச் செலாவணியின் சந்தையின் முன்னணி சிறப்பு வழங்குநர்களில் ஒருவரான டிராவலெக்ஸ் நிறுவனம், பாரதத்தின் ரூபாய்கள், டாலர்கள், பவுண்டுகள் மற்றும் யூரோக்களை ஏற்றுக்கொள்வதைக் காணலாம். பயணிகள் முனைய கட்டிடத்தில் அமைந்துள்ள ஆறு அந்நிய செலாவணி கடைகளில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், ராஜ்குமார் ராஜு என்பவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் @rajkumar_raju அளித்துள்ள விளக்கத்தில், “டிராவலெக்ஸ் நிறுவனம், 4 நாட்டின் நாணயங்களை மட்டும் ஏற்கவில்லை, அது சுமார் 40க்கும் மேற்பட்ட கரன்சிகளின் நாணய மாற்றத்தை வழங்குகிறது. சார்க் நாடுகளில் உள்ள பாரதம் உட்பட நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நாணயங்களையும் டிராவலெக்ஸ் ஆதரிக்கிறது. முக்கியமாக நிறைய பாரத தேசத்தவர்கள் அந்த நாட்டில் வேலை செய்வதால் அவர்களை ஈர்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய அரசு, பாரதத்தின் நாணயத்தை உலகளாவிய நாணயமாக மாற்ற முயற்சித்து வருகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில், ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ), பிஜி, போட்ஸ்வானா, கயானா, ஜெர்மனி, கென்யா, இஸ்ரேல், மலேசியா, மொரிஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து என 18 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு சிறப்பு வோஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை திறக்கவும், பணம் செலுத்த ரூபாயைப் பயன்படுத்தவும் அனுமதித்துள்ளது. அதன் மூலம் இப்போது நமது வர்த்தகர்கள் மற்ற நாடுகளில் இருந்து ரூபாயில் பணம் செலுத்தி பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். அதுமட்டுமின்றி, சமீபத்தில், அமெரிக்க டாலரைப் போல பாரத நாணயத்தை உலக அளவில் ஏற்றுக்கொள்ளும்படி செய்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழ்பெற்ற பாடகர் மிகா சிங் நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் ஷாப்பிங் செய்ய ரூபாயைப் பயன்படுத்த முடிந்தது என்றார். இதற்காக பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்திய மிகா, ‘நமது பணத்தை டாலரைப் போல பயன்படுத்த உதவியதற்காக’ பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here