கம்சனால் முடியாததை திராவிடம் சாதிக்கிறது.

0
115

(துக்ளக்கில் இவ்வார கேள்வி பதிலில் இருந்து )

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் கம்ஸனுக்கும், பாஹுக்கா என்ற ஒரு அறிவுஜீவிக்கும் இடையே நடந்த விவாதம்.

கொடுங்கோல் ஆட்சி செய்து மக்களது வெறுப்பை ஈட்டிய கம்ஸன், ஜராசந்தனின் மாப்பிள்ளை. ஜராசந்தனின் குரு பாஹூக்கா. தன் குருவிடம் ஆலோசனை கேட்க கம்ஸனை ஜராசந்தன் தூண்ட, பாஹூக்காவை கம்ஸன் நாடினான்.

‘ என்னை வெறுக்கும் குடிமக்களின் மதிப்பை நான் எப்படிப் பெறுவது’ என்று கம்ஸன் கேட்க, ‘நீ மக்களது நிலங்களை அபகரிக்கிறாய், குழந்தைகளைப் படுகொலை செய்கிறாய், உன்னை மக்கள் வெறுப்பது நியாயம் தானே?’ என்று கேட்டார் பாஹூக்கா. ‘பிரச்னைக்குத் தீர்வு கேட்டால், நியாயப்படுத்துகிறீர்களே?’ என்று கேட்டான் கம்ஸன். அதற்கு பாஹூக்கா, ‘ அறத்தைப் போதிக்கும் பிராமணர்களும் , துறவிகளும் இருக்கும் வரை மக்கள் உன்னை வெறுக்கத்தான் செய்வார்கள்’ என்றார்.

‘அவர்களை எப்படிச் சமாளிப்பது?’ என்று கம்ஸன் கேட்டான். ‘தட்சிணை கொடுத்து பிராமணர்களின் வாயை மூடி விடலாம். ஆனால் எதுவும் வேண்டாது, யாருக்கும் அஞ்சாது தர்மத்தைப் போதிக்கும் துறவிகளை மக்கள் போற்றவே செய்வார்கள். அவர்கள் இருக்கும் வரை மக்கள் உன்னை மதிக்க மாட்டார்கள்’ என்றார் பாஹூக்கா. ‘துறவிகள் அனைவரையும் கொலை செய்துவிடலாமா’ என்று கம்ஸன் கேட்க, ‘மக்கள் புரட்சியால் நீதான் அழிவாய்’ என்று பதிலளித்தார் பாஹூக்கா.

‘பிறகு என்னதான் வழி, கூறுங்கள்’ என்று கம்ஸன் கெஞ்சினான். பாஹூக்கா, ‘ஒரே ஒரு வழிதான் இருக்கிறது . மக்களுக்கு அறத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் செய்ய வேண்டும் . தாய் – தந்தையர் களை, பெண்களும் பிள்ளைகளும் போற்றிப் பாதுகாக்கக் கூடாது. கற்பை விடுத்து பெண்கள் இச்சையை நாடவேண்டும். அவர்களை எல்லாம் அப்படி மாற்ற நீ அரசாங்கத்தின் கஜானாவைத் திறந்து, எல்லோருக்கும் எல்லாம் என்று வாரி இறைக்க வேண்டும். மக்கள் போதை, சிற்றின்பத்தில் மிதக்க வேண்டும். அப்போது ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் அறவாழ்க்கை அழியும். எல்லோரும் உன்னையே சார்ந்து, உன்னை தெய்வமாக ஏற்பார்கள். துறவிகளை பைத்தியங்கள் என்று பரிகாசம் செய்வார்கள். சுயச் சார்பை இழந்த ஆட்டு மந்தை போன்ற மக்கள் , நீ நான்கு சாட்டை அடி கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்பார்கள்’ என்று கூறினார். அப்பாடா! நம் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது என்று மகிழ்ந்தான் கம்ஸன். அன்று பாஹூக்கா கூறியதை கம்ஸனால் செய்ய முடிய வில்லை . ஆனால், இன்று திராவிடம் செய்கிறது .

அறவாழ்க்கைக்கு அடிப்படை குடும்பம். அதன் மையம் பெண். குடும்பத் தலைவன் தவறாக நடந்தாலும் குடும்பம் பிழைத்துவிடும். ஆனால், குடும்பத் தலைவி தவறாக நடந்தால், குடும்பம் அழிந்து விடும் . அதுதான் பெண்ணின் மகிமை. கற்பு ஒரு பெண்ணின் விரதம். பெண்ணுக்குப் பெருமையான அது மனதுக்கு உறுதி கொடுத்து பெண்மைக்கு அரணாகவும் இருந்தது. கற்பு என்பது அறம் . அறம் என்பது சிறப்பு. தவறு செய்பவர்களைக் கூட, தான் செய்வது தவறு என்று நினைக்க வைப்பதுதான் அறம். அறத்தை அழித்தால், தவறு என்றே ஒன்று இல்லாமல் போய்விடும் என்பதே பாஹூக்காவின் சித்தாந்தம். அதனால்தான் வள்ளுவர், கம்பர் போன்ற அறிவுஜீவிகள் பொது அறத்தையும், பெண்களின் கற்பையும் போற்றினர்.

இச்சைதான் வாழ்க்கை என்று கூறி, கற்பைக் கிண்டலடித்து, பெண்ணடிமை என்று இகழ்ந்த ஈ.வெ.ரா.வை தந்தை என்றும், தமிழகத்தை பெரியார் மண் என்றும் போற்றும் தமிழகத்தில், நீங்கள் கூறும் வக்கிரங்கள் பெருகுவதில் என்ன ஆச்சரியம்? வள்ளுவர், கம்பர் ஊட்டிய அமுதத்தின் தாக்கம் குறைந்து, திராவிடம் பாய்ச்சிய இந்த விஷம் கொஞ்சம் ஏற மூன்று தலைமுறை ஆகியிருக்கிறது. ஊடகங்கள், சினிமா, சீரியல்கள் இதற்கு தூண்டுகோலாக இல்லை என்றால் இந்த விஷம் பரவாது. இன்றும் பெரும்பாலான பெண்களும், குடும்பங்களும் அற வாழ்க்கை நடத்துவதால்தான், நமது சமுதாயம் பிழைத்து நிலைத்திருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here