சுவாமிசகஜானந்தர்

0
102

சுவாமிசகஜானந்தர்

1. ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் பிறந்தார் (1890). இவரது இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் பிறந்தது. சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.

2. குடும்ப வறுமையால் படிப்பை விட்டுவிட்டு, பெற்றோருடன் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்குச் சென்று கூலி வேலை செய்யத் தொடங்கினார். பல ஆன்மிக நூல்களைக் கற்றார். காஞ்சிபுரம் தட்சிண ஸ்வாமி என்பவரிடம் பல ஆன்மிக விஷயங்களைக் கற்றார். அவரே தன் சீடருக்கு ‘சுவாமி சகஜானந்தர் என்ற பெயரை சூட்டினார்.

3. 1910-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக சிதம்பரத்துக்கு இவரை குரு அனுப்பிவைத்தார். சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர். பணமாகவும், நிலமாகவும் தானமாக வழங்கினர். 1916-ம் ஆண்டு நந்தனார் கல்விக் கழகத்தைத் தொடங்கினார். இலங்கை, பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் சென்று உரையாற்றி நிதி திரட்டினார்.

4. ஒரு சில ஆண்டுகளிலேயே மேலும் ஏழு ஊர்களில் இதன் கிளைகளைத் தொடங்கி, அங்கெல்லாம் மாணவர்களுக்கு படிப்பு, ஆன்மிக ஞானம், தொழிற்கல்வி, தமிழிசை அனைத்தையும் போதித்தார். 1929-ல் மாணவர் இல்லம், 1930-ல் மாணவியர் விடுதியையும் தொடங்கினார்.

5. வ.உ.சி.யிடம் திருக்குறள், தமிழ் இலக்கியங்களைக் கற்றார். மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களை ஆழ்ந்து கற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

6. நாரத சூத்திரத்தைத் தமிழில் ‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ‘நமது தொன்மை’ என்ற நூல் எழுதினார். ‘பரஞ்சோதி’ என்ற இதழை நடத்தி வந்தார். ஆக்ஸ்போர்ட் என்ற அச்சகத்தையும் நடத்தினார்.

7. மக்களின் நலனுக்காக அரசியலிலும் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்றுத் தந்தார்.

8. இவரது அயராத முனைப்பாலும் மற்றும் பலரது போராட்டங்களாலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர்,மே 1, 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here