ஓர் பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் அரசுகள் முடிவெடுக்க அவகாசம் கோரியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று பதில் அளித்தது. ஓர் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒன்பதாவது நாளாக நேற்று விசாரித்தது. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளின் கருத்தை பெறும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய அரசு அறிவிக்கை அனுப்பியது. இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையின் போது, ”தனி நபர்களின் திருமண தகுதியை தாண்டி, அவர்கள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதி அளிக்கிறது. ”நிறைவான குடும்பம் என்பது, உயிரியல் ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்வது மட்டுமல்ல. அதையும் தாண்டி, பல்வேறு கூறுகளை அவை உள்ளடக்கியது என்பதை சட்டம் அங்கீகரிக்கிறது,” என, நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது பதில் அளித்த மத்திய அரசு தரப்பு, ‘ஓர் பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஏழு மாநில அரசுகள் தங்கள் பதில்களை அளித்துள்ளன. ‘காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா, அசாம் மாநில அரசுகள் இதை ஏற்கவில்லை. ‘மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் அரசுகள் இது தொடர்பாக தீவிரமாகவும், விரிவாகவும் விவாதிக்க வேண்டி இருப்பதால், முடிவெடுக்க அவகாசம் கோரியுள்ளன’ என, தெரிவித்தது.