காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தனது சொந்த மண்ணில் எந்த இடத்திலும் மாநாட்டை நடத்துவதற்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. சுற்றுலாத்துறை தொடர்பான மாநாடு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் முதல் 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, நடக்கும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகும். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.