திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பள்ளியைக் கட்டியிருப்பதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீர்நிலைகள் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது, இந்நிலையில் இன்று, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பையொட்டி, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் பள்ளி வாயில் முன்பு காத்திருந்தனர். முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, கட்டடம் உறுதி தன்மையில்லை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை என்று கூறி இங்கு பள்ளி செயல்பட அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.