பொது சிவில் சட்டம் என்பது, திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குடும்ப சொத்துரிமை, தத்தெடுப்பது என, பல தனிநபர் சட்டங்களில் உள்ளவற்றை குறிக்கிறது. தற்போது பல்வேறு தனிநபர் சட்டங்களில் உள்ளவற்றை மாற்றி, அனைத்து மக்களையும் பொதுவான தளத்தில் இணைப்பதை, 44வது சட்டப் பிரிவு குறிப்பிடுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாட்டுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பார்லிமென்டே முடிவு செய்யும். இந்த சூழ்நிலையில், 21வது சட்டக் கமிஷன், 2018ல் தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த சட்டக் கமிஷனின் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இதன் அடிப்படையிலேயே, 22வது சட்டக் கமிஷன் தற்போது பொது மக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துகளை கேட்டுள்ளது.