அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர். பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது, ‘140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். அதுவும் இந்த அவையில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது எனக்கு பெருமை. இந்திய- அமெரிக்க மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் மக்களை ஒருங்கிணைக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகளில், பல்வேறு மாநிலங்களில் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான கிளை மொழிகள் உள்ளன.. தற்போது பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும்’ என்றார்.