இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.
விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.