விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்கள் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக, ‘இஸ்ரோ’ இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ககன்யான் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ., தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். அதன்பின், பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்படுவர். இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள பல இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நேற்று நடந்தது. பல்வேறு சீதோஷ்ண நிலைகளில், பல சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின்கள் செயல்படும் வகையிலான சோதனைகள் நடத்தப்பட்டன. நான்காவது முறை இந்த சோதனைகள் முடிவு, முழு திருப்தி அளிப்பதாக அமைந்துள்ளதாக, இஸ்ரோ நேற்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.