இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட முதல், ‘சி295’ போக்குவரத்து விமானத்தை, நம் படையினரிடம், ‘ஏர் பஸ்’ நிறுவனம் நேற்று ஒப்படைத்தது. நம் விமானப்படையில், வீரர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு பணிகளுக்காக, ‘ஏவ்ரோ 748’ என்ற விமானங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. இதற்காக, 21,935 கோடி ரூபாய் செலவில், 56 ‘சி295’ விமானங்களை வாங்க, ‘ஏர் பஸ்’ நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. சவில் நகரில் உள்ள, ‘ஏர் பஸ்’ விமான தயாரிப்பு மையத்தில் தயாரான முதல், ‘சி295’ போக்குவரத்து விமானத்தை, நம் விமானப்படையின் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேற்று பெற்றுக்கொண்டார். 16 விமானங்கள் 2025க்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின், குஜராத்தின் வதோதராவில் தயாராகி வரும், ‘டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ்’ என்ற தொழிற்சாலையில், 40 விமானங்கள் தயாரிக்கப்படும். இதை, ‘டாடா’ நிறுவனம், ‘ஏர் பஸ்’ நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த தொழிற்சாலைக்கான பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்., மாதம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.