அந்த ராணிக்கு கத்திச்சண்டை, குதிரை ஏற்றம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல் என எல்லா போர்க்கலைகளும் தெரியும். நாட்டைத் திறம்பட ஆட்சி செய்த அந்த ராணி மீது, மக்கள் அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார்கள்.
பக்கத்து நாட்டில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ஆட்சி செய்பவர் ஒரு பெண்தானே, எளிதாக வென்றுவிடலாம் என்று படையுடன் புறப்பட்டார்.
செய்தி, ராணிக்குப் போனது. அவர் கையில் வாளுடன் காற்றாய்ப் புரவியில் பறந்தார் போருக்கு. புழுதி பறக்க, வாள் வீச்சுகள் ஓயாத சத்தம் எழுப்ப, இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. படையெடுத்து வந்த ராஜா கடைசியில் தோற்றார். அவர் மால்வா மன்னர் பஸ்பகதூர் (Baz Bahadur). வென்ற அரசி ராணி துர்காவதி.
ராணி துர்காவதி 1524 அக்டோபர் 5ல் பிறந்தவர். கோண்டுவானா நாட்டின் மன்னரான தால்பத் ஷா என்பவரை மணம் புரிந்தார். ராஜா 1550ல் மரணம் அடைய, ஐந்து வயதான தன் மகன் வீர் நாராயணனுக்கு முடிசூட்டி அவன் சார்பாக கோண்டுவானா பகுதியை (இன்றைய மத்திய பிரதேசம்) ஆட்சி செய்தார் துர்காவதி.
துர்காவதிக்கு சில சிற்றரசர்கள் கப்பம் கட்டினார்கள். ராணியின் புகழ் எட்டு திக்கும் பரவி, டில்லியை ஆளும் அக்பருக்கும் போனது.
சும்மா இருப்பாரா அக்பர்? ‘கப்பம் கட்டு, இல்லா விட்டால் நாட்டை ஒப்படை’ என்று ஆணை இட்டார். ராணி மறுத்தார்.
தன் படைத் தளபதி ஆசிப்கான் தலைமையில், பெரும்படையை அனுப்பி வைத்தார். ராணியின் படையில் 20 ஆயிரம் குதிரைகள், ஆயிரக்கணக்கான யானைகள், எண்ணற்ற வீரர்கள் கொண்ட படை இருந்தது. அனால் அதையும் விட பலம் வாய்ந்தது முகலாயப்படை.
முகலாயப் பேரரசின் படைபலத்தை விளக்கிய திவான், அக்பருடன் சமாதானமாகப் போவதே நல்லது என்று ராணிக்கு அறிவுரை கூறினார்.
ஆனால், ”அவமானப்பட்டு உயிர் வாழ்வதைவிட, மரியாதைக்குரிய விதமாக தன்மானத்துடன் சாகவே விரும்புகிறேன்” என்று முழங்கினார் ராணி துர்காவதி; தனது படைகளை போருக்கு ஆயத்தப்படுத்தினார்.
ராணி துர்காவதி யானை மீது அமர்ந்து ஈட்டிகளையும், அம்புகளையும் பறக்க விட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிரிப்படையினரின் அம்புகள் ராணி துர்காவதியின் கழுத்தை துளைத்தன. அவரது தோல்வி உறுதியாகிவிட்டது. அவரும் நினைவிழந்தார்.
அப்போது, போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்று மாவுத்தன் அறிவுறுத்தினான். ஆனால், துர்காவதி அதனை ஏற்கவில்லை.
”படுதோல்வியுற்று எதிரியின் கரத்தில் சிக்குவதை விட, உயிரை மாய்த்துக் கொள்வதே சிறப்பானது” என்று கூறிய ராணி துர்காவதி, தனது குறுவாளால் மார்பில் குத்திக்கொண்டு போர்க்களத்திலேயே (1564, ஜூன் 24) உயிர்நீத்தார்.
ராணி துர்காவதியின் வீரமரணம் முகலாயப் பேரரசர் அக்பரையே நிலைகுலையச் செய்தது. அவரது ஆக்கிரமிப்புத் திட்டங்கள் பலவற்றை ராணியின் வீர மரணம் மறுசிந்தனைக்கு உள்ளாகியது.
ராணி துர்காவதியின் தீரம் இன்றும் பழங்கதைப் பாடல்களில் புகழப்படுகிறது. அவரது வீரம் இந்தியப் பெண்களின் வீரத்திற்கான மறைக்க முடியாத சான்றாக விளங்குகிறது.