காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டிற்கான இந்திய தூதரக உயர் அதிகாரியை வெளியேறும்படி கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக அந்நாட்டிற்கான உயர் அதிகாரியை வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக, கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கனடா வெளியுறவு அமைச்சர் மெலினி ஜோலி சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனட தூதரக அதிகாரிகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.