ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆர்.எஸ்.எஸ் தென்பாரத தலைவர் இரங்கல்

0
153

அடிகளார் முக்தி அடைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா. வன்னியராஜன் அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மீக நீரோடையில் நீந்திய அடிகளார், தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி, அப்போது முதல் முழுநேரமாக ஆன்மீக சேவையை, உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு, ஆன்மீக குருவாகவும், அன்பைப் பொழியும் அன்னையாகவும் திகழ்ந்தார்.

கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீகத் தேடலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். பாமரரின் இதயத்தில் அன்னையின் வடிவான சனாதன தர்மத்தைக் கொண்டு சேர்த்ததோடு, அவர்களின்பால் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட அரும்பாடுபட்டார்.

ஏழை, எளிய மக்களுக்காக கல்வி நிலையம் துவங்கி கல்வி கண் திறந்தார். மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மருத்துவமனை துவங்கி பெருஞ்சேவை புரிந்தார்.

ஆன்மீகப் புரட்சியாக, பெண்கள் கருவறைக்குள் செல்ல இயலாது என்ற கூற்றை பொய்யாக்கியதோடு, பெண்களையே அம்மனுக்கு பூஜை செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார்.

இப்படி எண்ணிலடங்கா சேவையாற்றிய பெரியவர் அடிகளாரின் மறைவு, ஆன்மீக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் சேவையை கௌரவித்து மத்திய அரசாங்கம் ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடிகளார் செய்த ஆன்மீக, மருத்துவ, கல்விச் சேவை என்றும் அவர் புகழ்பாடும். அடிகளாரை இழந்த அன்னையின் பக்தர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here