அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதி சேதம்

0
1213

கனமழை காரணமாக உத்தரமேரூர் அருகே அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அழிசூர் கிராமத்தில் கி.பி-1122-ம்-ஆண்டு விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

செய்யாறு நதியின் தென்கரையில் உள்ள இந்த சிவாலயம் நான்கு கால பூஜைகள் நடைபெற்று சிறப்புறடன் விளங்கியது கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. தொடர்ந்து வந்த படையெடுப்பாலும் பராமரிபின்மையாலும் கால ஓட்டத்தில் இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இங்குள்ள ஈசனை அகஸ்திய முனிவர் கடும் தவம் செய்து வழிபட்டதாக செப்பேடுகளில் கூறப்படுகிறது.

அம்பிகையின் பெயர் ஸ்ரீ அம்புஜ குசலாம்பாள். இக்கோயிலுக்கு மதில் சுவர்கள் இல்லை. இதற்கு மாற்றாக கற்பலகைகளால் ஆன சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன் எல்லைக்கு வெளியே விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் கொடிமரம் கல் தூணில் எழுப்பப்பட்டுள்ளது.

இறைவன் அருளாலீஸ்வரர் அழிஞ்சில் மரத்தால் ஆனதாக கூறுகிறார்கள். புராண முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

சுவாமி விமானம் சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து சேதம் அடைந்தது. கற்குவியலுக்கு இடையில் லிங்கத்தின் மேல் பகுதி மட்டும் தெரிகிறது.

இக்கோயிலில் அமைந்துள்ள நந்தியம் பெருமான் நேர்த்தியான சிற்பக் கலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. காளை ஒன்று வயலில் மேய்ந்துவிட்டு மர நிழலில் படுத்து ஏகாந்தமாக அசை போட்டுக்கொண்டிருக்கும் காட்சி எப்படி இருக்குமோ, அதே கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நந்தியம்பெருமானை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலம் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிட்டுமாம். பிரதோஷ காலத்தில் வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்குவதோடு நோயற்ற வாழ்வு கிட்டும் என்று கூறுகிறார்கள்.
கோயிலின் தென்புற நுழைவாயிலில் மங்கள விநாயகர் காட்சி தருகிறார். உட்புறம் சென்றால் கருவறை இடிந்த நிலையில் காணப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் சிக்கயுள்ள ஈசனைக்காணும் போது நம் கண்கள் பனிக்கின்றன. அன்னை அம்புஜ குசலாம்பாள் அபய ஹஸ்தத்துடன் புன்னகை செய்கிறாள். முருகன், பைரவர் சன்னதிகளும் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சிலைகளே இல்லாத இரு சன்னதிகள் காணப்படுகின்றன.

எங்குமில்லாத சிறப்பாக ஸ்ரீ-அருளாலீஸ்வரர் கருவறை அருகே ஸ்ரீ-லக்ஷ்மி நாராயணப்பெருமாள் காட்சி தருவது வியப்பை அளிக்கிறது.

அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக கோவிலின் ஒரு பகுதி சரிந்தது.இதனையடுத்து கோவிலை பார்வையிட சென்ற செயல் அலுவலரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவிலையும், இவ்வாலயத்துக்கு சொந்தமான சொத்துக்களையும், பாதுகாத்து பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here