சடையநாயனார் சான்றோர்தினம்

0
350

சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருத்தொண்டத் தொகை மூலம் 63 நாயன்மார்களை இந்த உலகுக்கு எடுத்துரைத்த சுந்தர மூர்த்தி சுவாமிகளை மகனாக பெற்றவர்.செல்வமும் சைவ வளமும் சிறந்து விளங்கும் திருநாவலூரில் பிறந்த சடைய நாயனார் சிவபூஜை செய்து எந்நேரமும் அவரை தொழுது வழிபட்டு வந்தார். மனிதனுக்கே உரிய பல நல்ல பண்புகளோடு தர்ம நெறியில் வாழ்ந்து வந்தார்.இவருடைய மனைவியார் இசைஞானியார். சடைய நாயனாரும் இசைஞானி அம்மையாரும் தவமிருந்து பெற்ற தங்கள் பிள்ளைக்கு நம்பியாரூரார் என்று இறைவனது திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள். ஒரு நாள் நம்பியாரூரார் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்த நரசிங்கமுனையார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.பால் மணம் மாறா பாலகனின் அழகிலும், தெய்வ ஒளியுடைய திருமுகத்தையும் கண்டு, இந்தக் குழந்தையை நம்மோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, அந்தக்குழந்தையை கையில் ஏந்தியபடி சடைய நாயனாரின் வீட்டுக்கு வந்தான்.அரசனின் வரவை எதிர்பாராத சடைய நாயனாரும், இசைஞானியாரும் அவரை வரவேற்க, தம்முடைய பால்ய நண்பனான சடைய நாயனாரைக் கண்டதும் அரசருக்கு உவகை பொங்கிற்று. நண்பா உன் குழந்தையின் அழகும் ஒளியும் என்னைக் கவர்ந்துவிட்டது. இவனை என்னுடன் அழைத்து சென்று அரண்மனையில் வளர்க்க விரும்புகிறேன் என்றார். உவகையோடு அரசனின் வேண்டுக்கோளுக்கிணங்க நம் குழந்தை அரண்மனையில் வளரவேண்டும் என்பது திருநாவலூர் பெருமானின் விருப்பம் போல என்று அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு அனுப்பி வைத்தார்கள். அதனால் தான் சேக்கிழார் இவரை மேம்படு சடையனார் என்று புகழ்கிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருத்தொண்ட தொகையில் தங்கள் பெற்றோர்களைப் பற்றி சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இத்தகைய அருந்தவப் புதல்வனைப் பெற்றதால் சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவனின் திருவடியை அடைந்தார்கள்.சிவாலயங்களில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சடைய நாயனாருக்கு குரு பூஜை கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here