ராணி வேலு நாச்சியார் 1730 ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கிணங்க சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு பிடித்தது வீரம் மட்டுமே. வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். 1746ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதருக்கும், வேலு நாச்சியாருக்கு திருமணம் நடைபெற்றது. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், பறங்கியர்களுக்கு கப்பம் செலுத்த மறுத்தார். சிவகங்கையைத் தாக்க தளபதி பாஞ்சோர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் ஆற்காடு நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார். ஆவேசமடைந்த வேலு நாச்சியார் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்க துடித்தார். 8 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார் வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான் வேலு நாச்சியார்.
#velunachiyar #சான்றோர்தினம்