பரமஹம்ச யோகானந்தர் ஜனவரி 5, 1893 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூரில் பிறந்தார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும், தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் நிறுவி பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்க்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குரு. அவரது தன்வாழ்க்கை நூலான, யோகியின் சுயசரிதை சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாக விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1917 – ல் நவீன கல்வி முறைகளுடன் யோகக் கலையையும் ஆன்மீக கொள்கைகளையும் இணைத்த கல்வித்திட்டத்துடன் மேற்கு வங்காளத்தின் திஹிகாவில் சிறுவர்களுக்கானப் பள்ளியைத் தொடங்கினார். ஓராண்டிற்குப் பிறகு இந்தப் பள்ளி ராஞ்சிக்கு இடம் பெயர்ந்தது. 1920-ல், பாஸ்டனில் ஒழுங்குபடுத்தப்பட்ட சமய முற்போக்காளர்களின் பன்னாட்டு பேராயத்திற்கு பேராளராக ஐக்கிய அமெரிக்காவிற்குப் பயணமானார். 1935-ல், தமது குரு யுக்தேசுவர் கிரியைக் காணவும், யோகோடா சத்சங் சமூகத்தை நிலைநிறுத்தவும் இந்தியா திரும்பினார். தனது இந்தியப் பயணத்தின்போது மோகன்தாசு கரம்சந்த் காந்தி, புகழ்பெற்ற இயற்பியலாளர் ச. வெ. இராமன், யுக்தேசுவர் கிரியின் சீடர்கள் ஆகியாரைச் சந்தித்தார். இந்தியாவில் இருக்கும்போது யுக்தேசுவர் இவருக்கு பரமஹம்ச என்ற பட்டத்தை வழங்கினார்.