கேரள மாநிலம் கொச்சியில் மார்ச்1, 1904ஆம் ஆண்டு பிறந்தார். எர்ணாகுளம், அம்பா சமுத்திரத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். 1921-ல் நெல்லை இந்து கல்லூரியில் படித்த சமயத்தில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார் காந்திஜி. படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை பெற்றார். முன்னணி பத்திரிகையாளரான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் நட்பு கிடைத்தது. திலகர் வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். தினமும் 6 மணிநேரம் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காந்திஜியின் ‘ஹரிஜன்’ இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இவர் எழுதிய சிறுகதைகள், ‘மணிக்கொடி’, ‘காந்தி’ ஆகிய இதழ்களில் வெளிவந்தன.வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்பதற்காக அந்த வேலையை விட்டார். 20 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, மீண்டும் அதே பத்திரிகையில் சேர்ந்தார். 1934-ல் ‘தினமணி’ இதழ் தொடங்கப்பட்டபோது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும் இவர் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினர். 1944-ல் சொக்கலிங்கம் வெளியேறிய பின்னர், இவர் ஆசிரியரானார். தொடர்ந்து 44 ஆண்டுகள் பணியாற்றினார்.‘கணக்கன்’, ‘ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி’, ‘குமாஸ்தா’, ‘அரைகுறை வேதியன்’, ‘அரைகுறை பாமரன்’ ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார். தமிழகத்தில் நிகழ்ந்த முக்கியமான பல அரசியல் மாற்றங்களுக்கு இவரது எழுத்துக்கள் முக்கிய காரணமாக அமைந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட 17 மொழிகள் அறிந்தவர். வாசகர்களின் பொழுதுபோக்குக்கு தீனி போடாமல், செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியும் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார். திருக்கோவிலூர் கபிலர் விருது, பி.டி. கோயங்கா விருது, அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருது ஆகிய விருதுகளைப் பெற்றார்.அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழ் பத்திரிகை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், ‘ஏஎன்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் 2001-ல் தனது பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதியன்று 97-வது வயதில் மறைந்தார்.
Home Breaking News தமிழ் பத்திரிகை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ஆ_நா_சிவராமன் அவர்கள் பிறந்த தினம்