சென்னை மயிலாப்பூரில் மார்ச் 11, 1927 ஆம் ஆண்டு பிறந்தவர். பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். அது இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்புடன் வழிநடத்தும் குணமும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியைத் தனது குருவாகப் போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையைத் தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 65 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். விரிவுரைகள் பக்கம் பக்கமாக இருந்தாலும், சளைக்காமல் கையால் எழுதுவார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். எளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகச் செயலாற்றியவர். ‘சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது’ என்ற கொள்கையையும் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கடைசி நேரம் வரை டாக்டர் சாந்தா பணியாற்றிக் கொண்டே இருந்தார் என்றும், நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் உருக்கமுடன் தெரிவித்துள்ளனர்.